திங்கள், 7 அக்டோபர், 2013

கடலும்,கன்னிப் பெண்ணும்..

உன் கரம்பற்ற
நான் விரும்பும் அளவு-
என் கால் நனைக்க
கடலும்..


கரிப்புநீரோடு
கழிகிறது வாழ்க்கை 
எனக்கும் 
கடலுக்கும்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

கனவு சித்திரம்.

என் சிறு கனவொன்றை
சித்திரமாக்கினேன்.
அதன் விளக்கம்
ஒருவேளை
உங்களின் 
இன்றையக் கனவில் 
வியாபித்திருக்கலாம்...!!

மழை - சில குறிப்புகள்.

ஆகாயம் மேகத்தால் 
மண்ணுக்கு இட்டது முத்தம்.
மழை.
மின்னல் வெட்டியதில் 
கிழிபட்ட மேகத்தின் குருதி-
மழை.
விடாது பெய்வது 
பிழையென்றாலும் 
அதையும் சொல்கிறார்கள் 
மழை.
பகலில் காண நேர்ந்தது 
பேய் ரூபம்-
மழை.

ஓய்ந்து விட்டாலும் 
ஒழுகியபடி தொடர்கிறது 
ஓலைக்  குடிசைக்குள் 
மழை.

என் ஒற்றை பொண்டாட்டியே..

ஒரு நாளில் தீருமா கோபம் என்
ஒத்தைப் பொண்டாட்டியே..??
ரெண்டு நாளாகிடுமா உன்
ரெடிமேட் சிரிப்புதிர...??
மூன்று நாளில் முடித்துன்
முகம் திருப்பிப் பாராயோ..??
நான்கு நாள் நீடித்தால் என்
நாக்கு செத்துப் போகாதோ..??
அஞ்சாம் நாள் அச்சமொன்று
அத்தான் மனதில் படராதோ..??
ஆறாம் நாளும் உன்கோபம்
ஆறாமல் போய்விட்டால்
ஏழாம் நாளும் அதற்கடுத்தும்
என் செய்வேன் ஏந்திழையே..??
முகம் பார்க்காவிடினும் என்
முகநூல் பக்கம் பார்த்துவிடு.
என்னிந்தக் கவிதைக் கண்டு
மன்னித்து கோபம் தீர்த்துவிடு.

மறந்த நாளில்..

மழை வந்ததாலா அறியேன் எனினும்
மனம் நிறைந்தது மகிழ்வினில்-நீ
குடையென்பதை மறந்த நாளில்...

தங்கம் என வியந்தேன் மங்கையுன்
அங்கம் -உடுத்தியிருந்த உடையொருத்
தடையென்பதை மறந்த நாளில்..

புரிந்துக் கொண்டேன் அன்று நானும்
பிரம்மன் படைத்ததுன்னை- அவன்
இடையென்பதை மறந்த நாளில்..

மறைந்து நீ போனபின்பும் மழை
தொடர்ந்து பெய்தவண்ணம்- நான்
நடையென்பதை மறந்த நாளில்..