புதன், 7 நவம்பர், 2012

கட்டாமலுள்ள சதுரம்.

வாய்திறந்து பாட்டி சிரிக்கும்போதெல்லாம்
ஏனோ நினைவிற்கு வருகிறது
வண்டலூரில் வீடுகளுக்கிடையில் வாங்கிப் போட்டு
கட்டாமலிருக்கும் காலிமனை.

செவ்வாய், 6 நவம்பர், 2012

கடல் - அம்மா.

தன்னார்வத் தொண்டர் ஒருவர்
போக்குவரத்து நெரிசலை
சரி செய்கிறார் பகுதிநேர வேலையாக..

பட்டாணி,சுண்டல் விற்கிறான்
படிப்பு செலவுக்கு உதவுமென்று
பள்ளி மாணவன் பகுதிநேர வேலையாக..

மீன் பிடித்து கரை ஒதுங்கியப் படகு
மறைவாக வந்து ஒதுங்கிய ஜோடிக்கு
நிழல் வார்த்து நின்றது பகுதி நேர வேலையாக..

இருந்தாலும்  கடற்கரையில்
கடல் மட்டும்
இயங்கிக் கொண்டிருந்தது முழுநேர வேலையாக..
இல்லத்தில் என் அம்மாவைப் போல.

பணம்..பணம்..


கடன் வாங்கியவன்
கடன் கொடுத்தவன்
தவிக்கிறார்கள் தூக்கமின்றி..
நினைவெல்லாம் பணம்.
 

கடன் வாங்காதும்
கடன் கொடுக்காதும்
இருப்பவன்
நிம்மதியாய் தூங்குகிறான்..
கனவெல்லாம் பணம்.

மத்யமம்

ஒன்றுமில்லாமல்
எல்லாமிருப்பவர்கள் ...

எல்லாமிருந்தும்
ஒன்றுமில்லாமிருப்பவர்கள்....

இவ்விருப்பிரிவினரல்லாது

கொஞ்சமாகவாவது இருப்பதைக்
காப்பாற்றிக்கொள்ள
இயங்கிக்கொண்டிருப்பவர்களால்

உயிர்ப்புடன் இருக்கிறது உலகம்.

திங்கள், 5 நவம்பர், 2012

அது ஒரு காலம்.

முறைத்து ,குழைந்து

முண்டியடித்து
முட்டித் தேய்ந்து
தலை மேல் நடந்து

'கவுன்ட்டர்' அருகே
பாம்பாய் கீழ் இறங்கி

பண்டிகை சட்டை அன்றே
பழசாகி கிழிந்து
படம் பார்த்த
'த்ரில்'அனுபவத்தை

'நெட்டில்' பதிவு செய்து
நலுங்காமல் போய்வரும்
இந்த தலைமுறைக்கு
ஆவணப் படுத்த யாரேனும்  
ஆவன செய்துள்ளீர்களா ...

என் இந்தக் கவிதையல்லாது..??

சன்னல்சாரல்.

கைபேசியில் காதலியின் கொஞ்சல்..
கையில் அம்மா தந்த சூடான டீ..
சன்னல் வழி ரசிக்கும்போது
இன்னும்
சுவாரஸ்யமாய் இருக்கிறது
சோவென்றுப் பெய்யும் மழை...

அப்பா



ஞாயிறு, 4 நவம்பர், 2012

எரிச்சல்களுக்கிடையில் ஓர் நேர்த்தி.

அவரிடம் தோட்டக்காரனுக்குரிய
இலாவகம் தெரிந்தது-
நீர் தெளித்து தலைக்  கோதிய போது.

இடை இடையே கண்ணாடியில்
டிவி காணும் கள்ளத்தனம் ஏதுமில்லை.

செய்யும் வேலையை பாதியில் விட்டு
செல்போன் அரட்டை செய்ய வில்லை.

சற்றேத் தள்ளி சாய்ந்துப் பார்த்து
சரியாய் குறையை
சரிசெய்துத்
தொடர்ந்தபோது வேலையை -ஆர்வத்
தீவிரம் அவர் முகத்தில் கண்டு
திகிலாய்த் தானிருந்தது.

என்ன ஒன்று -
பக்கவாட்டில் வெட்டும்போது
தோள்களின் மீது அப்படியே
 சாய்ந்துக் கொண்டதையும்
முன்மண்டையில் வெட்டும்போது
மடிமீதே அமர்ந்துக் கொண்டதையும்
ஜீரணித்துக் கொள்ளத்தான் இன்னும்
சிரமமாய் இருக்கின்றது.               

சனி, 3 நவம்பர், 2012

ஒட்டிக் கொள்ள ஒரு விண்ணப்பம்.


காதல் வேண்டிப் பெண்ணே உன்னிடம்
கையேந்திக் கேட்டேன் யாசகம்.
மனதைக் கலைத்துப் போட்டது பெண்ணே
மாட்டேன் என்ற உன் வாசகம்.


திரை நீ போட்டுக் கொண்டதால் மனம்
உடைந்துத் துண்டானது நேற்று.
விடுமாப்  பெண்ணே மூடியத் திரையை
விலக்காது இந்தக் காற்று.


ஆகக் கடைசியில் வந்து சேரும் 
அந்தத் திரைப் படப் போலீஸ் போல்
நானும் எட்டிடுவேன் உனை ஒட்டிடுவேன்
நகம்  நீங்கிடா  நகப் பாலீஷ்  போல்.

ஜோக்


பிளாஸ்டிக்லே வாழை இலைப் போட்டாக சரி..அதுலே ஸ்வீட்,பொரியல்,பாயாசம்,எல்லாம் பிரிண்ட் பண்ணிப்
போட்டுட்டு வெறும் சோத்தையும்,சாம்பார்,ஊறுகாயையும் பரிமாறுவது நல்லாவா இருக்கு..

என்றைக்குமான கேள்வி.

கவர்ச்சி சலுகைகளோடு ஆளும்கட்சி -எதையும்
கண்மூடி எதிர்க்கும் எதிர்க்கட்சி.

ஆலோசனைக்கூற இங்கு  ஆளில்லை.
ஒருவரை ஒருவர்
அர்ச்சித்து கொள்ளா நாளில்லை.

கூட்டணிக்கட்சிகள்  ஜோரா-அட
போட்டே ஆகணும் ஜால்ரா.

இவர் மட்டும் என்ன யோக்கியம். .
பெருக்கிக்கொண்டனர் சௌபாக்கியம்.

மாநிலக்கட்சிகளை குழையாது-இங்கு
தேசியக்கட்சிகளும் நுழையாது.

அரசியல் என்னும் சகதியால்
ஆகினர் எம்மக்கள் அகதியாய்.

மக்கள் சேவை மிகத்தூயப்பணி-அது
என்றாவது அவர்கள் தலையாயப்பணி??!

கிறுக்கு எழுத்தாளன்.

உழுபவனை உதாசீனப் படுத்தும் சமூகம்
அழுபவனை ஆறுதல் படுத்தா சமூகம்
தொழுபவனைமுட்டாளாக்கும் சமூகம்
எழுபவனை எழவிடாதசமூகம்
விழுபவனை தூக்கிவிடாத சமூகம்-என
பழுதுகளாலான சமூகத்தை ஏற்றி சிகரத்தில்
எழுதுகோலால் வைப்பேனென்பார் ஏமாறாதீர்.

உண்மை நிலவரம்.

   
                                                          ஒரு பொய்யை போஷிக்க
                                                   உலையில் வைக்கப் படுகின்றன
                                                            ஓராயிரம் உண்மைகள்.

                                                                செரிக்க இயலாமல்
                                                                  சிரிக்கிறார் காந்தி.

இறக்கைகள் முளைக்கும் தருணம்.

அழைத்துச் செல்லவந்த
அம்மாவின் இடுப்பில் அமர்ந்து
பள்ளியில் நடந்த கதைகளை
மழலையில் குழந்தைக் கூறிவர
தோளிரண்டில் தோன்றின இறக்கைகள்.

வான்வழியே விரைவாக வீட்டை
வந்தடைந்தாள்  தாய்.

வெள்ளி, 2 நவம்பர், 2012

வாஸ்து..


                                                            மீன் தொட்டியை
                                                    நம் படுக்கையறைக்குள்
                                                  நம் கட்டில் தலைமாட்டில்

                                                     இடம் மாற்றி வைத்தாய்.
                                          
                                        சண்டை போட்டுக் கொண்டிருந்தவை
                                                     சமர்த்தாய் இப்போது
                                          குட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன.

இல்லறப் பயணம்.

யாரும்
பின்தொடர இயலாமலும்
புரிந்துக் கொள்ள இயலாமலும்
இருந்தது என்னுடைய
இலக்கற்ற பயணம்.

வாய்த்த வாகனமும்
வரப்பிரசாதம்.

செலுத்தும் திசையில
அலுத்துக் கொள்ளாது
சுமந்து என்னை ஓடுவதில்
சுகம் கண்டது .

அசதியும் உண்டு
வசதியும் உண்டு
இருவருக்கும் பயணத்தில்.

அனுசரித்துக் கொள்வதில்
அமைந்து விடுகிறது
எங்கள் வெற்றி.

வரப்போகும் ரசிகர்களின்
கொண்டாட்டத்திற்காகவும்
சந்தோஷத்திற்க்காகவும்
இப்பயணம் இலக்காகிவிடும்போது
வழக்கற்றுப் போகும்
இலக்கற்றப் பயணம் என்பது.

மரமேறி

மரமேறி மரமேறி களைத்தவரே ...மனம்
மரத்துப் போய் உடலும்தான் இளைத்தவரே

கர(ம்)மாறி கத்தி இடைக்குப் போனதென்ன ..
கணிணிதான் கையிரண்டில் வந்ததென்ன..

தர(ம்)மாறி தரணியெல்லாம் நாளாச்சு:அதுபோல்
தன்நிலையும் தான்மாற வாடினையோ.

சிரம்தூக்கி மேல்நோக்க சிரமப்பட்டு-கூகிளிலே
செவ்விளநீர் காய்த்த திசை தேடினையோ

புரமொன்றுப் பேசாய் முகம்நோக்கி ஆதலினால்
'பேஸ்புக்கில் புகுந்தனையோ:போர்

அறமென்று 'ட்வீட்டரிலே'அரசுசட்டங்களை
ஆதியோடந்தமாய் அலசி வகுந்தனையோ.

பரம்பொருளே பாரினில் என்னிலை மாற்றென
பாதிவழி நீயமர்ந்து பரமனுக்கு 'மெயில'னுப்ப

துறந்தனைத்தும் ஓய்வெடுக்கா உன் திறம்வியந்து
தென்னைபோல் நீ உயர வாழ்த்துகிறேன்

வேறென்ன செய்ய ..??

வளைந்த இலைகள்
வில் புருவம்,விழியாக..
 

மலர்ந்த இதழ்கள்
மது கசியும் வழியாக..
 

நுகர்ந்த உன் நாசியே
நொடியில் வண்ணத்துப்பூச்சியாக
 

நகர்ந்துப்போனேன் நான்
வாயிருந்தும் வாயில்லாப்பூச்சியாக.


உயிர் விளையாட்டு.


காட்டில் தீர்த்து முடிக்காத
துவேஷங்கள்
கடலில் ஈடேறுகின்றன .

எவர்மீது,ஏனென்று ..
எதுகுறித்தும் கவலையில்லை -
எதிர்படுபவன் ஏமாளி
எனும்பட்சத்தில்.

வறுமைக் கோட்டைத் தாண்ட
வலைவிரிக்க வந்தவன்
எல்லைக் கோட்டைத் தாண்டினானென்று
சல்லடைக் கண்ணாய் துளைக்கப்பட்டான்.

வாழ்க்கைப் போராளிகளை
விடுதலைப் போராளிகளாக
காட்சிப் பிழையோடே
காட்டிக் கொண்டிருக்கிறது
திகிலிலிருந்து இன்னமும் மீளாத
அவர்களின் தொலைநோக்கிகள்.

உங்கள் கர்ணகடூர மொழிதான்
எச்சரிப்பதற்கு
எல்லாவிதத்திலும் பொருந்திப்போகுமே..
இருந்தும் ஏன்..??!!

தன் மரணத்தின் காரணம்குறித்த
அவன் அறியாமை வானமெங்கும்
கருமையைஅப்பியிருந்தது.

கூடியிருந்த கடலின் கரிப்புத்தன்மை
கரையிலிருந்தவர்கட்கு ஏதேனும்
விபரீதத்தை உணர்த்தியிருக்கக்கூடும்.

நீங்களோ சாட்சிகள் இல்லையென்று
நக்கலாய் சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

பரந்த வானும்
விரிந்த கடலும்
வேறு என்னவென்று நினைக்கிறீர்கள்...

என்னினும் அதிகமாய்.

முழம் அளந்த பூக்காரி
கொஞ்சம் தள்ளி துண்டிக்க
என்னினும்
மகிழ்ச்சி அடைந்திருக்கும்-
உன்
கூந்தலில் அமர்வதை எண்ணி
அந்தக்
கொசுறுப் பூக்கள்..!!

ஏன் ,,??







மீன்களுக்கு மட்டும்
''போன்சாய்''கடல்
உருவாக்கித் தருபவர்கள்
கிளிகளுக்கும்,லவ்பேர்ட்ஸ்களுக்கும் 
''போன்சாய்''பூங்கா
அமைத்து தராது
ஏன்
''போன்சாய்''புழல்சிறை
அமைத்து தருகிறார்கள்..??

இப்படியும் ஒரு குழப்பம்.








மாடிப் படி ஏறும்போது
''மனோ நாளை வருது''என்று
கீழ்வீட்டு மாமி சொன்னாள்
எதிர்குடித்தன சீதாவிடம்.
 

அறைக்குத் திரும்பிய நான் அன்றைய இரவெல்லாம்
ஆலோசித்ததில்
தூக்கம்போனது-
மனோரஞ்சிதமா....
மனோரஞ்சனா...
மனோகரனா...
மனோகரியா...