திங்கள், 7 அக்டோபர், 2013

கடலும்,கன்னிப் பெண்ணும்..

உன் கரம்பற்ற
நான் விரும்பும் அளவு-
என் கால் நனைக்க
கடலும்..


கரிப்புநீரோடு
கழிகிறது வாழ்க்கை 
எனக்கும் 
கடலுக்கும்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

கனவு சித்திரம்.

என் சிறு கனவொன்றை
சித்திரமாக்கினேன்.
அதன் விளக்கம்
ஒருவேளை
உங்களின் 
இன்றையக் கனவில் 
வியாபித்திருக்கலாம்...!!

மழை - சில குறிப்புகள்.

ஆகாயம் மேகத்தால் 
மண்ணுக்கு இட்டது முத்தம்.
மழை.
மின்னல் வெட்டியதில் 
கிழிபட்ட மேகத்தின் குருதி-
மழை.
விடாது பெய்வது 
பிழையென்றாலும் 
அதையும் சொல்கிறார்கள் 
மழை.
பகலில் காண நேர்ந்தது 
பேய் ரூபம்-
மழை.

ஓய்ந்து விட்டாலும் 
ஒழுகியபடி தொடர்கிறது 
ஓலைக்  குடிசைக்குள் 
மழை.

என் ஒற்றை பொண்டாட்டியே..

ஒரு நாளில் தீருமா கோபம் என்
ஒத்தைப் பொண்டாட்டியே..??
ரெண்டு நாளாகிடுமா உன்
ரெடிமேட் சிரிப்புதிர...??
மூன்று நாளில் முடித்துன்
முகம் திருப்பிப் பாராயோ..??
நான்கு நாள் நீடித்தால் என்
நாக்கு செத்துப் போகாதோ..??
அஞ்சாம் நாள் அச்சமொன்று
அத்தான் மனதில் படராதோ..??
ஆறாம் நாளும் உன்கோபம்
ஆறாமல் போய்விட்டால்
ஏழாம் நாளும் அதற்கடுத்தும்
என் செய்வேன் ஏந்திழையே..??
முகம் பார்க்காவிடினும் என்
முகநூல் பக்கம் பார்த்துவிடு.
என்னிந்தக் கவிதைக் கண்டு
மன்னித்து கோபம் தீர்த்துவிடு.

மறந்த நாளில்..

மழை வந்ததாலா அறியேன் எனினும்
மனம் நிறைந்தது மகிழ்வினில்-நீ
குடையென்பதை மறந்த நாளில்...

தங்கம் என வியந்தேன் மங்கையுன்
அங்கம் -உடுத்தியிருந்த உடையொருத்
தடையென்பதை மறந்த நாளில்..

புரிந்துக் கொண்டேன் அன்று நானும்
பிரம்மன் படைத்ததுன்னை- அவன்
இடையென்பதை மறந்த நாளில்..

மறைந்து நீ போனபின்பும் மழை
தொடர்ந்து பெய்தவண்ணம்- நான்
நடையென்பதை மறந்த நாளில்..

புதன், 25 செப்டம்பர், 2013

நகரம் முழுவதும்
பரவலாய்
தேய்ந்திருந்தன வீடுகள்.

காணாமல் போயின
ஒவ்வொன்றாய்
ஒவ்வொன்றாய்-
கலகலப்பு படிக்கட்டுகள்.

வீடடைந்தவன்
வண்டியிலிருந்து இறங்காது
வண்டியோடு
வீட்டுக்குள் இறங்கியதைக் காண

நினைவில் வந்து போனது-

நாலுபேர் சேர்ந்து
நண்பனின் அண்ணன் பைக்கை
ரோட்டிலிருந்து
வீட்டுக்குள் ஏற்றியது.

பால்கனியில் நின்றவர் கையில்
தினசரியை திணித்துப் போனான்
பேப்பர்காரப் பையன்.

அரசியல்வாதிகளால்
நாடு வளர்ந்ததோ இல்லையோ
ரோடு வளர்ந்தது மேலே
அவர்களின் பினாமிகளால்.

நீரூற்றி காடு
வளர்த்தார்களோ இல்லையோ
மேலே மேலே
தாரூற்றி ரோடு வளர்த்தார்கள்.

வீதிகள் வளர்கின்றன-
அடுத்து ஒரு புரட்சிக்கான
மேடைகளாக.

விளக்கு

நீ ஏற்றிய 
இத்தனை அகல்விளக்குகளினும் 
என்னை கவர்ந்தது 
காதல் சுடரேந்திய 
உன் அகலக் கண்விளக்கே..!!

இது வேறொன்றுமில்லை....

இது வேறொன்றுமில்லை.
பேசித் தீர்த்தப் பின்
பேசாமல் தீர்த்துக் கொள்வது.

இது வேறொன்றுமில்லை.
அணைத்தலை விரும்பும்
அணையாத நெருப்பு

இது வேறொன்றுமில்லை.
எதனிடையும் நுழையும்
காற்றுக்கான சவால்.

இது வேறொன்றுமில்லை.
இலையில் விழுந்த
மழையின் துளி
அதன் நரம்பில் பயணித்தல்.

இது வேறொன்றுமில்லை.
மந்திரப் பாயில்
அந்தரப் பயணம்.

இது வேறொன்றுமில்லை
மண்ணில்
மானுடப் பயிர் செழிக்க
மறுக்க இயலா
மெத்தை விவசாயம்.

இது வேறொன்றுமில்லை.
தூண்டிலில் சிக்கியப் பின்
நீந்த துவங்குவது.


இது வேறொன்றுமில்லை.
கரை ஏறியப் பின்
குளிக்கச் செல்வது.

வியாழன், 19 செப்டம்பர், 2013

மனதோடு சில மழைக் காட்சிகள்..

கப்பலை நசுக்கிச்சென்ற சைக்கிளை நோக்கி
ஏதும் செய்வதறியாது சிறுவனவன்
கைதனை வீச குறிதவறி
வானத்தை கிழித்தது மின்னல்.

தானே முன்வந்து தொகுதி எம்.எல்.ஏ.
தங்கள் குறைகளனைத்தும் கேட்பதை
சந்தேகத்தோடு மக்கள் நோக்க
வானத்திலும் எங்கோ இடித்தது.

சிலக் குடைகள் தங்கள்
பாத்திரமறிந்துப் பங்காற்ற
பலக் குடைகளை திருப்பிமடக்கி
பாத்திரமாகவே ஆக்கியது பெருங்காற்று.

வானத்தையே மூடிவிடுமளவு
வருகிறது கோபம்.
முடியாது போய் பிளாஸ்டிக் விரிப்பால்
மூடிவிடுகிறான் பிளாட்பார வியாபாரி
தன் பழக்கடையை.

மழையை ரசித்தவாறு
எதிரே வந்துக்கொண்டிருந்தவள்
திடீரென அலைபேசியில்
யாரையோ அழைக்க ஆரம்பித்தாள்.
ஓயாமல் பேசும் தோழி
ஒருவேளை நினைவிற்கு வந்திருக்கலாம்.

பிளாட்பாரவாசிகளுக்கு அன்று
படுக்க கிடைத்தது பக்கத்து
''பள்ளி''யறை .

புதன், 4 செப்டம்பர், 2013

இதழ்மீது ஓர் சயனம்.

புள்ளினம் கண்டு மானிடமா..
மானிடம் கண்டு புள்ளினமா..

துவக்கியது யாரென்று தெரியவில்லை.
துவங்கியது இன்னும் முடியவில்லை.

முத்தத்தில்
கொடுப்பவரே எடுப்பவராம்..
எடுப்பவரே கொடுப்பவராம்..
மொத்தத்தில்
காதல்ஜோதி அணையாதிருக்க
கடைசி வரை தரும் ''பவரா''ம்.

இது
காதல் வளர்க்கும் ஓர் வேள்வி.
இதில்லையேல்
அங்கு காதலே ஓர் கேள்வி.

விழிமூடி இதழ்மீது ஓர் சயனம்.
வழிதேடி புதுஉலகில் ஓர் பயணம்.

கவிஞன் ஆக்கினாள் என்னை.

கருவிழிகள் இரண்டும்
வண்டுகளாய் உருள
கருங்கூந்தல் நிறம் கண்டு
கார்மேகம் மிரள
புன்னகைக்கு பின்வாங்கி
மல்லிச்ச்சரம் புரள - கண்டு
கவிதையெழுதாது என்செய்வேன்
கற்பனைகள் திரள.??


சுதந்திர நாள் சிந்தனை.

சுதந்திரம் பெற்று சுற்றித் திரிந்தோம்.
சுயமாய் சிந்திக்கக் கற்றோமா..?
வெள்ளையன் ஓட சுதந்திரம் பெற்றோம்.
வறுமையை விரட்டி பெற்றோமா..?
வியர்வை சிந்தி நாளும் உழைத்து
விதியிடம் வேதனை விற்றோமா..?
சிங்களன் சீனன் பாகிஸ்தான் காரன்
சீண்டிட கோபம் உற்றோமா..?
மொத்த இந்தியர் ஒற்றுமைக் காத்து
முதலிடம் உலகில் கைபற்றோமா..??


இது ஒரு மழைக் காலம்..

மழை மாத்திரமே
பூக்கச் செய்கின்றன
கருப்பு மலர்கள்-
குடை.

திரையரங்க நெருக்கபரிபாலனம்
தொடர்ந்து நீடித்தது மழையால்
ஒற்றை குடையின் கீழ்.

வாரியடித்த சேற்றுக்கு
வருந்தாமல் விரைகிறார்கள்
முன்னாள் பாதசாரிகள்.

தலைமறைவாய் காத்திருக்கும்
திறந்த சாக்கடைகள்
குழிப்பறிக்கு.

பிள்ளைகள் விட்ட கப்பல்கள்
மூழ்காதிருக்க
பட்டென்று விட்டிருக்கலாம்
மழை.

ரங்கோலி.

ஊரெல்லாம் நீர்தெளித்து கழுவி
வான் போட்ட கோலம்
போனதெப்படி வானகத்திற்க்கே நழுவி..??!!

கார்மேக கண்ணா..

நாதங்கள் குழலில் எழுப்பி இந்த
நானிலத்தை மயக்கிய நந்தா-உன்

பாதங்கள் வரைந்து நாங்களெதிர்
பார்த்திருந்தாலும் உன் வரவுக்காக

பேதங்கள் இல்லாப் பெருமழைப்
பொழியும் கருமேகமாகி- வரும்

மாதங்கள் எல்லாம் மனம்குளிர
மேலிருந்தே அருளிடுவாய் மாதவா.

முன்ஜென்ம முடிச்சு.

பாய்ந்து வரும் ரயில் அதனை 
பார்க்க ஓடி வந்தனையோ..

ஓய்ந்து நின்று மூச்சு வாங்கி 
ஓயா தென்ன சிந்தனையோ..

மாய்ந்து மாய்ந்து நீ  யோசிப்பது 
முன் ஜென்மக் காதலையோ..

ஆய்ந்து அதனை நினைவுக் கூற 
அட சின்னமூளை போதலையோ.

சாய்ந்து வெறித்து நீ நோக்கையிலே 
சதிகாரக் கும்பல் வண்டவாளம் -

தோய்ந்த நினைவுகள் தந்திடலாம் 
தேய்ந்து வெளுத்த தண்டவாளம். 

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

ஜாலம் செய்யும் காலம்.

முட்களிடை சிக்கியும்
கிழிபடாது காயங்களின்றி
நழுவும் காலம்.

உடன் விரையும் நமக்கு 
உண்டோ
"உள்ள"காயங்களின் கணக்கு ?.

விரைந்தபடியே காலம்
நம் வலிகளை
மறைக்கச் செய்யுது ஜாலம்.

கண்மூடித்தனமாய் விரையும்
காலம்
தீர்ப்புகளையும் வீசிச் செல்கிறது
திருத்தமாய்
யானைகளுக்கும்,பூனைகளுக்கும்..

வியாழன், 21 மார்ச், 2013

படபடப்பு.

காதலிக்கும் பெண்ணை
காததூரத்தில் கண்டதும்
என் இதயம் தான்
அப்படி ஆகிறதென்றால்
சாலையோரத்து
மரத்தின் இலைகளும்
ஏன் அப்படி படப்படக்கின்றன...?! வா.சுகன்ப்ரியன்.21/03/2013.

முத்த சங்கிலி.

கழுத்தில் இருந்த சங்கிலி
களவாடப்பட்ட அன்றிரவு
என் வெற்றுக் கழுத்தில் நீ
பதித்தாய் நீள் முத்தத்தால் ஓர் சங்கிலி.
நீங்கியது அன்றிரவு ஆயுளுக்கும்
எதைக்குறித்தும் மொத்தமாய் என் கிலி.

விருப்பங்களாகட்டும் திருப்பங்கள்..

கதாநாயகனை மேலே விழுந்து
காதலிக்கிறாள் ஒருத்தி.
காததூரம் தள்ளிநின்று
காதலிக்கிறாள் இன்னொருத்தி.
எனினும் கதாநாயகனின் கனவு 
தீர்மானிக்கிறது -
யாருக்கு அவன்   கண்ணன் என்பதையும்..
யாருக்கு அவன்   அண்ணன் என்பதையும்..

கதாநாயகி குளிக்கும்போது
கரையிலுள்ள அவள் ஆடைகளை
முகர்ந்தபடி முறைக்கிறான் ஒருவன்.
ஆற்றிலேயே இறங்கி அவளையே
முகர்ந்தபடி இறுக்குகிறான் ஒருவன்.
எனினும் கதாநாயகியின்
நாணத்தில் கவிழும்முகம்
தீர்மானிக்கிறது -
யார் அவள்  இதயக்கள்ளன் என்பதையும்..
யார் அந்த படத்தின் வில்லன் என்பதையும்..

இறுதிக் காட்சியில்
இயக்குனர் தீர்மானிக்கிறார்-
காதல் செத்து காதலர்கள் வாழ்ந்தார்களா என்பதையும்...
காதலர்கள் செத்து காதல் வாழ்ந்ததா என்பதையும்..

நாம் தீர்மானித்தபடி
எதுவும் நடந்துவிட்டால் இங்கு
சுவாரஸ்யமின்றிப் போய்விடுவது
ரசிக்கவந்த சினிமா மட்டுமல்ல-
ரகளையான நம் வாழ்க்கையும்தான்.  -வா.சுகன்ப்ரியன். 21/03/2013.

ஞாயிறு, 17 மார்ச், 2013

எறும்புகளின் பேரணி



















அந்த எறும்புகள் ஒவ்வொன்றும்
ஆரம்ப பாடசாலை வகுப்புகளிலிருந்தே
அறிமுகம் நமக்கு.

நமக்கான இனிப்பை சுமந்து வரிசையாய்
நகராது அவை நிற்க -அவற்றின் மீது
நகர்ந்தூர்ந்து சுவைக்கும் நம் மனது.

அர்த்தமுள்ள அவற்றின் அணிவகுப்பை
அமைக்க அனைவரும் முயற்சிக்கிறோம் .

அந்த இலக்கை அடைபவர்கள்
அறியப் படுகிறார்கள் இலக்கியவாதிகளாய்.

கடைந்தெடுத்த அயோக்கியத்தனங்களை
கடுமையாய் சாடியபடி கட்டெறும்பு அணிவகுப்பு..
பஞ்சினையொத்த மென் உணர்வுகளை 
பாங்காய் சொல்லியபடி சிற்றெறும்பு அணிவகுப்பு..
தோழர் புரட்சிகளுக்கு தோள்  கொடுத்தபடி
தோரணையாய் செவ்வெறும்பு அணிவகுப்பு..

எறும்பூர பெரும்பாறைத்  தேயும்-இந்த
எறும்புகள் மீது
பார்வையூர மனபாரம் தேயும்.

கழிப்பறைகளிலும் காணக்கிடைக்கும்
கவர்ச்சியான அணிவகுப்பென்றொருத் தகவல்.
கண்டுகொள்ளாதிருத்தலதை நலம் என்பது
காதில் விழுந்த கூடுதல் தகவல்.

ஆலயத்திற்கு ஒப்பானவை
அவற்றின்  உறைவிடங்கள்.

எறும்புகளின் புற்றினை இடித்து
எதையாவது கட்டிவிடத் துடிக்கும்
எதேச்சாதிகாரத்தை எதிர்த்து
எல்லா இடங்களிலும் 
உருவாகியபடியே உள்ளது
எறும்புகளின் பேரணி.                 
                                                                      -வா.சுகன்ப்ரியன்.17/03/2013.

செவ்வாய், 12 மார்ச், 2013

உருமாற்றம்

என் சொற்க(ல்)ள் உன்னை
காயப்படுத்தியதற்கு
மானசீகமாய் வருந்தி நான்
மடலொன்று எழுதியபோது-

வரிகளை அழித்து திருத்தியது
சிந்தியக் கண்ணீர்த் துளி-

மடலை ஓர்
சத்தியக் கவிதையாய்...

திங்கள், 4 மார்ச், 2013

வாரி கொடுத்த நவரசம்.

நாட்டிய நிகழ்ச்சியொன்றிற்கு
நான் புறப்பட்ட நேரம்
இடுப்பில் சீப்போடு வந்தெதிரில்
அமர்ந்தாய்.

பின்னியிருந்த சடையை
உன் விரல்கள்
பிரித்த லாவகத்தில்
நாட்டிய முத்திரைகள்
நிறைவாய் தென்பட்டன.

ஆர்வமாய் அவதானித்தேன்
இதென்ன புது கூத்தென்று.

ஆச்சர்யம் உன் விழிகளில்
அருவியாய் பொங்கி வழிய
இடம்,வலம் கழுத்தை ஒடித்து
இருள்கூந்தலை பிஞ்சு விரல்களால்
பின்தள்ளி நீவுகையில்
நிம்மதியும்,சாந்தமும்
நிறைந்திருந்தது நின் முகத்தில்.

வாளை உருவும் வீரம்
இடுப்பிலிருந்து நீ
சீப்பை எடுத்தபோது தெரிந்தாலும்
சிக்கெடுத்து சீவத் தொடங்கியதும்
அங்கே-
சிந்தி சிதறியது
எல்லாம்
சிருங்காரம்.

உதிர்ந்து சீப்பில் சிக்கிய முடிகண்டு
அதிர்ந்து நீ பயந்தது
அற்புத பாவம்.

சிங்கப்பல் கடித்து,வாய் சுருக்கி
கட்டைவிரல் நகங்களுக்கிடையில்
கண்டெடுத்த ஈரையும்,பேனையும்
நீ நசுக்கியபோது
நச்சென்று புலப்பட்டது
வெறுப்பும்,கோபமும்.

பின்னி முடித்த கூந்தல் உன்
பின்னிரு மத்தளங்கள் மேலாட
நாணி நீ ஓடுகையில்
நிறைவுற்றிருந்தது
நான் பார்க்க புறப்பட்ட நாட்டியம்.-

வியாழன், 28 பிப்ரவரி, 2013

சுஜாதா.

உற்றதும்,மனதிற்கு உகந்ததும் யாதெனில்
கற்றதும்,பெற்றதும் விகடனில்-மற்றததில்
'பிசாத்தா'என்றால் இல்லையனைத்தினும்
சுஜாதா படிக்க சுகம்.

சனி, 23 பிப்ரவரி, 2013

ஞானோதயம்.

நீ துணி உலர்த்த வந்தபோதுதான்
முதன்முதல் உன்னைப் பார்த்தேன்.
அப்போது சத்தியமாய் தெரியாது
நீ என்னையும்
காயவைக்கப் போகிறாய் என்று.


                                                                           -  வா.சுகன்ப்ரியன்.31/01/2013.

சிறுவனிடம் தோற்ற சிங்களர்.

முக்கிய எதிரியை அழித்த பின்னும்
பேடிகளுக்கு
மூளையில் பதிந்த பயம் தீரவில்லை.

பயத்தின் சுவடோ,அழுத தடமோ
பாலகனின் பளிங்கு விழிகளில் இல்லை.

உண்மையான வீரத்தின் ஆழமும்
உதயமாகப் போகும் தமிழ் ஈழமும்
பேடிகளின் கண்களுக்கு புலப்பட்டிருக்க வேண்டும்-
பாலகனின் பளிங்கு விழிகளில்.

தின்றிட ஏதோ அவனுக்கு தந்துவிட்டு
கொன்றிட அவனை ஆலோசனை நடத்திவிட்டார்கள்
அடுத்த அறையில்.

என்ன சொல்லி அழைத்து சென்றிருப்பார்கள் அந்தக்
குழந்தையை கொல்வதற்கு காடையர்கள்..??

''விளையாடலாம் வா'' என்றா..??

அட மடையர்களே..
அதிலும் தன் வீரமரணம் மூலம்
உங்களை மட்டுமல்ல
உலகத்தோர் உள்ளங்களையும் வென்றது அவன்தானே.

இந்த புகைப்படம் பார்த்து கற்றுக் கொள்-
எதிரிகளிடம் சிக்கினாலும் ''சிங்கிளா''
எப்படி இருப்பதென்பதை சிங்களா.
- வா.சுகன்ப்ரியன்.21/02/2013.

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

ஆதலினால் காதல் செய்வீர் அகிலத்தோரே...

நீ புத்தகம் வாசிப்பதை
ரசித்து பார்ப்பேன்.
அதைவிட நான்
அதிகம் ரசிப்பது-என் மீது
நீ புகார் வாசிப்பதை..!!

சமயத்தில் மோர்சாதம்
போதுமென்பேன்.
வடித்தது வீணானதென்று
வெடித்து சிதறுவாய் நீ.
மோர் சாதத்திற்கு
மிளகாய் வற்றலாகி
சுவைகூட்டும் உன் கோபம்.

ஒவ்வொருமுறை என்மீது நீ
கோபப்படும்பொழுதும்
சுலபமாய் புரிந்துக் கொள்ளமுடிகிறது
என்னால்-அது
யார் மீதுள்ள கோபம் என்று..

ஒரேஒருமுறை நான்
கோபித்துக் கொண்டதுண்டு உன்னை.
சண்டைப் போடாமல் என்னோடு - ஒரு
'சண்டே'யை வீணடித்ததற்காக.

பழுத்த ஊடலே கோபம்-ஆதலின்
பொறுத்தால்
பெறலாம் பெரும் லாபம் .

காதல் நம்மை மீட்டும் வாத்தியம்.
காதலால் மட்டுமே எதுவும் சாத்தியம்.

ஆதலினால் காதல் செய்வீர் அகிலத்தோரே...
                                                                                                 -வா.சுகன்ப்ரியன்.
14/02/2013.

புதன், 13 பிப்ரவரி, 2013

சகோதரி வினோதினி. (ஒரு கருகிய கனவு.)

வாசித்தால் வேதனை மிஞ்சுது
  வஞ்சியவள் மரணச் செய்தியை.
நேசித்ததை மறுத்ததற்கு ஐயகோ
  நேர்ந்திட வேண்டுமோ இக்கொடுமை.
யோசித்தால் வழியுண்டு ஆயிரம்
  யோக்கியமாய் அவள் அன்புப் பெற,
யாசித்தும் பெற்றிடலாம் தவறில்லை
 யாரும் யாரிடத்தும் காதலை,
பூசிக்கவேண்டியப் பேரழகை இப்படி
  பொசுக்கி அழிக்க பேடியவன்
''ஆசிட்''டை அண்டிப் போவானா..?
   அவனும் நல்ல கதியில்தான் சாவானா..?

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

நிரா(லா)சை

சோறூட்டப் பட்டதும்
குழந்தைகள்
உறங்கப் போய்விடும்
உண்மைத் தெரியாமல்
விளையாட வருவார்கள்
என்றெண்ணி
ஒவ்வொருநாள் இரவும்
காத்திருந்து காத்திருந்து
ஏக்கத்தில்
இளைத்து தேய்ந்தது நிலா..!!

திங்கள், 11 பிப்ரவரி, 2013

காவ(த)ல் தேவதை

நினைவுகளின் வீதியில் நின்றிருந்தேன்.

என்றும்போல் அன்றும்
எனைக் கடந்தாய் பாராது.

சற்று தூரம் சென்ற நீ
திரும்பியபோது பரபரப்பானேன்.

எதேச்சையாய் பார்ப்பதுபோல்
என்னை பார்த்த போது
உன் பார்வையில் சிதறிய
உள் அர்த்தங்கள்
அப்போது புரியவில்லை.

காதலைத் தாண்டி நீ யோசித்த முதிர்ச்சி
எனக்கு தருகிறது
காலங்கள் தாண்டி இப்போது அதிர்ச்சி.

ஏதோ ஒரு ''தர்ம''புரியில்
ஏதோ ஒரு தர்மவானுக்கு
தர்மபத்தினியானவளே ...

அன்று நீ அடக்கிவைத்தது
உன் உள்ளக் காதலை மட்டுமல்ல-
நம் ஊர் கலவரத்தையுமல்லவா ...!!

வியாழன், 31 ஜனவரி, 2013

விஸ்வரூபம்

புரட்சியாளனின் அஹிம்சா வழி ..
பெண்களின் அழகிய மீன்விழி..
எழுத்தாளனின் எழுதுகோல்..
எழுச்சிக் கொண்ட வீரனின் வாள் ..

வலிமையான ஆயுதங்கள் வரிசையில்
சினிமாவும் வருகிறது அமலுக்கு.
வரிசையில் சேர்த்ததற்கு
நன்றி பாராட்டுவோம் கமலுக்கு

தரிசனம்

தன் வீட்டின் முன்பிருந்த இடத்தில்
தான் கட்டிய கடைவளாகத்தை காட்டினான்
என் சக நகரத் தோழன் .
அங்கு முன்பிருந்த
சப்போட்டா,மாமரத்தின்
சமாதி போல் தென்பட்டது
அது எனக்கு.

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

பாக்கி

அப்பா,அம்மா,
அக்கா,அண்ணன்,
உறவினர்கள்,
குடும்ப நண்பர்கள்,
ஆசிரியர்கள்,
மனைவி,என
எல்லோருக்கும் பின்பும்
''எங்க செல்ல அப்பா'' என்று 
பிள்ளைகள் கன்னம் கிள்ளி
முத்தமிடும்போதுதான்
கவனத்திற்கு வருகிறது-இன்னும்
கொஞ்சித் தீர்க்கப்படாமலிருக்கின்றேன்  
நானென்று ..!!