வியாழன், 21 மார்ச், 2013

படபடப்பு.

காதலிக்கும் பெண்ணை
காததூரத்தில் கண்டதும்
என் இதயம் தான்
அப்படி ஆகிறதென்றால்
சாலையோரத்து
மரத்தின் இலைகளும்
ஏன் அப்படி படப்படக்கின்றன...?! வா.சுகன்ப்ரியன்.21/03/2013.

முத்த சங்கிலி.

கழுத்தில் இருந்த சங்கிலி
களவாடப்பட்ட அன்றிரவு
என் வெற்றுக் கழுத்தில் நீ
பதித்தாய் நீள் முத்தத்தால் ஓர் சங்கிலி.
நீங்கியது அன்றிரவு ஆயுளுக்கும்
எதைக்குறித்தும் மொத்தமாய் என் கிலி.

விருப்பங்களாகட்டும் திருப்பங்கள்..

கதாநாயகனை மேலே விழுந்து
காதலிக்கிறாள் ஒருத்தி.
காததூரம் தள்ளிநின்று
காதலிக்கிறாள் இன்னொருத்தி.
எனினும் கதாநாயகனின் கனவு 
தீர்மானிக்கிறது -
யாருக்கு அவன்   கண்ணன் என்பதையும்..
யாருக்கு அவன்   அண்ணன் என்பதையும்..

கதாநாயகி குளிக்கும்போது
கரையிலுள்ள அவள் ஆடைகளை
முகர்ந்தபடி முறைக்கிறான் ஒருவன்.
ஆற்றிலேயே இறங்கி அவளையே
முகர்ந்தபடி இறுக்குகிறான் ஒருவன்.
எனினும் கதாநாயகியின்
நாணத்தில் கவிழும்முகம்
தீர்மானிக்கிறது -
யார் அவள்  இதயக்கள்ளன் என்பதையும்..
யார் அந்த படத்தின் வில்லன் என்பதையும்..

இறுதிக் காட்சியில்
இயக்குனர் தீர்மானிக்கிறார்-
காதல் செத்து காதலர்கள் வாழ்ந்தார்களா என்பதையும்...
காதலர்கள் செத்து காதல் வாழ்ந்ததா என்பதையும்..

நாம் தீர்மானித்தபடி
எதுவும் நடந்துவிட்டால் இங்கு
சுவாரஸ்யமின்றிப் போய்விடுவது
ரசிக்கவந்த சினிமா மட்டுமல்ல-
ரகளையான நம் வாழ்க்கையும்தான்.  -வா.சுகன்ப்ரியன். 21/03/2013.

ஞாயிறு, 17 மார்ச், 2013

எறும்புகளின் பேரணி



















அந்த எறும்புகள் ஒவ்வொன்றும்
ஆரம்ப பாடசாலை வகுப்புகளிலிருந்தே
அறிமுகம் நமக்கு.

நமக்கான இனிப்பை சுமந்து வரிசையாய்
நகராது அவை நிற்க -அவற்றின் மீது
நகர்ந்தூர்ந்து சுவைக்கும் நம் மனது.

அர்த்தமுள்ள அவற்றின் அணிவகுப்பை
அமைக்க அனைவரும் முயற்சிக்கிறோம் .

அந்த இலக்கை அடைபவர்கள்
அறியப் படுகிறார்கள் இலக்கியவாதிகளாய்.

கடைந்தெடுத்த அயோக்கியத்தனங்களை
கடுமையாய் சாடியபடி கட்டெறும்பு அணிவகுப்பு..
பஞ்சினையொத்த மென் உணர்வுகளை 
பாங்காய் சொல்லியபடி சிற்றெறும்பு அணிவகுப்பு..
தோழர் புரட்சிகளுக்கு தோள்  கொடுத்தபடி
தோரணையாய் செவ்வெறும்பு அணிவகுப்பு..

எறும்பூர பெரும்பாறைத்  தேயும்-இந்த
எறும்புகள் மீது
பார்வையூர மனபாரம் தேயும்.

கழிப்பறைகளிலும் காணக்கிடைக்கும்
கவர்ச்சியான அணிவகுப்பென்றொருத் தகவல்.
கண்டுகொள்ளாதிருத்தலதை நலம் என்பது
காதில் விழுந்த கூடுதல் தகவல்.

ஆலயத்திற்கு ஒப்பானவை
அவற்றின்  உறைவிடங்கள்.

எறும்புகளின் புற்றினை இடித்து
எதையாவது கட்டிவிடத் துடிக்கும்
எதேச்சாதிகாரத்தை எதிர்த்து
எல்லா இடங்களிலும் 
உருவாகியபடியே உள்ளது
எறும்புகளின் பேரணி.                 
                                                                      -வா.சுகன்ப்ரியன்.17/03/2013.

செவ்வாய், 12 மார்ச், 2013

உருமாற்றம்

என் சொற்க(ல்)ள் உன்னை
காயப்படுத்தியதற்கு
மானசீகமாய் வருந்தி நான்
மடலொன்று எழுதியபோது-

வரிகளை அழித்து திருத்தியது
சிந்தியக் கண்ணீர்த் துளி-

மடலை ஓர்
சத்தியக் கவிதையாய்...

திங்கள், 4 மார்ச், 2013

வாரி கொடுத்த நவரசம்.

நாட்டிய நிகழ்ச்சியொன்றிற்கு
நான் புறப்பட்ட நேரம்
இடுப்பில் சீப்போடு வந்தெதிரில்
அமர்ந்தாய்.

பின்னியிருந்த சடையை
உன் விரல்கள்
பிரித்த லாவகத்தில்
நாட்டிய முத்திரைகள்
நிறைவாய் தென்பட்டன.

ஆர்வமாய் அவதானித்தேன்
இதென்ன புது கூத்தென்று.

ஆச்சர்யம் உன் விழிகளில்
அருவியாய் பொங்கி வழிய
இடம்,வலம் கழுத்தை ஒடித்து
இருள்கூந்தலை பிஞ்சு விரல்களால்
பின்தள்ளி நீவுகையில்
நிம்மதியும்,சாந்தமும்
நிறைந்திருந்தது நின் முகத்தில்.

வாளை உருவும் வீரம்
இடுப்பிலிருந்து நீ
சீப்பை எடுத்தபோது தெரிந்தாலும்
சிக்கெடுத்து சீவத் தொடங்கியதும்
அங்கே-
சிந்தி சிதறியது
எல்லாம்
சிருங்காரம்.

உதிர்ந்து சீப்பில் சிக்கிய முடிகண்டு
அதிர்ந்து நீ பயந்தது
அற்புத பாவம்.

சிங்கப்பல் கடித்து,வாய் சுருக்கி
கட்டைவிரல் நகங்களுக்கிடையில்
கண்டெடுத்த ஈரையும்,பேனையும்
நீ நசுக்கியபோது
நச்சென்று புலப்பட்டது
வெறுப்பும்,கோபமும்.

பின்னி முடித்த கூந்தல் உன்
பின்னிரு மத்தளங்கள் மேலாட
நாணி நீ ஓடுகையில்
நிறைவுற்றிருந்தது
நான் பார்க்க புறப்பட்ட நாட்டியம்.-