புதன், 7 நவம்பர், 2012

கட்டாமலுள்ள சதுரம்.

வாய்திறந்து பாட்டி சிரிக்கும்போதெல்லாம்
ஏனோ நினைவிற்கு வருகிறது
வண்டலூரில் வீடுகளுக்கிடையில் வாங்கிப் போட்டு
கட்டாமலிருக்கும் காலிமனை.

செவ்வாய், 6 நவம்பர், 2012

கடல் - அம்மா.

தன்னார்வத் தொண்டர் ஒருவர்
போக்குவரத்து நெரிசலை
சரி செய்கிறார் பகுதிநேர வேலையாக..

பட்டாணி,சுண்டல் விற்கிறான்
படிப்பு செலவுக்கு உதவுமென்று
பள்ளி மாணவன் பகுதிநேர வேலையாக..

மீன் பிடித்து கரை ஒதுங்கியப் படகு
மறைவாக வந்து ஒதுங்கிய ஜோடிக்கு
நிழல் வார்த்து நின்றது பகுதி நேர வேலையாக..

இருந்தாலும்  கடற்கரையில்
கடல் மட்டும்
இயங்கிக் கொண்டிருந்தது முழுநேர வேலையாக..
இல்லத்தில் என் அம்மாவைப் போல.

பணம்..பணம்..


கடன் வாங்கியவன்
கடன் கொடுத்தவன்
தவிக்கிறார்கள் தூக்கமின்றி..
நினைவெல்லாம் பணம்.
 

கடன் வாங்காதும்
கடன் கொடுக்காதும்
இருப்பவன்
நிம்மதியாய் தூங்குகிறான்..
கனவெல்லாம் பணம்.

மத்யமம்

ஒன்றுமில்லாமல்
எல்லாமிருப்பவர்கள் ...

எல்லாமிருந்தும்
ஒன்றுமில்லாமிருப்பவர்கள்....

இவ்விருப்பிரிவினரல்லாது

கொஞ்சமாகவாவது இருப்பதைக்
காப்பாற்றிக்கொள்ள
இயங்கிக்கொண்டிருப்பவர்களால்

உயிர்ப்புடன் இருக்கிறது உலகம்.

திங்கள், 5 நவம்பர், 2012

அது ஒரு காலம்.

முறைத்து ,குழைந்து

முண்டியடித்து
முட்டித் தேய்ந்து
தலை மேல் நடந்து

'கவுன்ட்டர்' அருகே
பாம்பாய் கீழ் இறங்கி

பண்டிகை சட்டை அன்றே
பழசாகி கிழிந்து
படம் பார்த்த
'த்ரில்'அனுபவத்தை

'நெட்டில்' பதிவு செய்து
நலுங்காமல் போய்வரும்
இந்த தலைமுறைக்கு
ஆவணப் படுத்த யாரேனும்  
ஆவன செய்துள்ளீர்களா ...

என் இந்தக் கவிதையல்லாது..??

சன்னல்சாரல்.

கைபேசியில் காதலியின் கொஞ்சல்..
கையில் அம்மா தந்த சூடான டீ..
சன்னல் வழி ரசிக்கும்போது
இன்னும்
சுவாரஸ்யமாய் இருக்கிறது
சோவென்றுப் பெய்யும் மழை...

அப்பா



ஞாயிறு, 4 நவம்பர், 2012

எரிச்சல்களுக்கிடையில் ஓர் நேர்த்தி.

அவரிடம் தோட்டக்காரனுக்குரிய
இலாவகம் தெரிந்தது-
நீர் தெளித்து தலைக்  கோதிய போது.

இடை இடையே கண்ணாடியில்
டிவி காணும் கள்ளத்தனம் ஏதுமில்லை.

செய்யும் வேலையை பாதியில் விட்டு
செல்போன் அரட்டை செய்ய வில்லை.

சற்றேத் தள்ளி சாய்ந்துப் பார்த்து
சரியாய் குறையை
சரிசெய்துத்
தொடர்ந்தபோது வேலையை -ஆர்வத்
தீவிரம் அவர் முகத்தில் கண்டு
திகிலாய்த் தானிருந்தது.

என்ன ஒன்று -
பக்கவாட்டில் வெட்டும்போது
தோள்களின் மீது அப்படியே
 சாய்ந்துக் கொண்டதையும்
முன்மண்டையில் வெட்டும்போது
மடிமீதே அமர்ந்துக் கொண்டதையும்
ஜீரணித்துக் கொள்ளத்தான் இன்னும்
சிரமமாய் இருக்கின்றது.               

சனி, 3 நவம்பர், 2012

ஒட்டிக் கொள்ள ஒரு விண்ணப்பம்.


காதல் வேண்டிப் பெண்ணே உன்னிடம்
கையேந்திக் கேட்டேன் யாசகம்.
மனதைக் கலைத்துப் போட்டது பெண்ணே
மாட்டேன் என்ற உன் வாசகம்.


திரை நீ போட்டுக் கொண்டதால் மனம்
உடைந்துத் துண்டானது நேற்று.
விடுமாப்  பெண்ணே மூடியத் திரையை
விலக்காது இந்தக் காற்று.


ஆகக் கடைசியில் வந்து சேரும் 
அந்தத் திரைப் படப் போலீஸ் போல்
நானும் எட்டிடுவேன் உனை ஒட்டிடுவேன்
நகம்  நீங்கிடா  நகப் பாலீஷ்  போல்.

ஜோக்


பிளாஸ்டிக்லே வாழை இலைப் போட்டாக சரி..அதுலே ஸ்வீட்,பொரியல்,பாயாசம்,எல்லாம் பிரிண்ட் பண்ணிப்
போட்டுட்டு வெறும் சோத்தையும்,சாம்பார்,ஊறுகாயையும் பரிமாறுவது நல்லாவா இருக்கு..

என்றைக்குமான கேள்வி.

கவர்ச்சி சலுகைகளோடு ஆளும்கட்சி -எதையும்
கண்மூடி எதிர்க்கும் எதிர்க்கட்சி.

ஆலோசனைக்கூற இங்கு  ஆளில்லை.
ஒருவரை ஒருவர்
அர்ச்சித்து கொள்ளா நாளில்லை.

கூட்டணிக்கட்சிகள்  ஜோரா-அட
போட்டே ஆகணும் ஜால்ரா.

இவர் மட்டும் என்ன யோக்கியம். .
பெருக்கிக்கொண்டனர் சௌபாக்கியம்.

மாநிலக்கட்சிகளை குழையாது-இங்கு
தேசியக்கட்சிகளும் நுழையாது.

அரசியல் என்னும் சகதியால்
ஆகினர் எம்மக்கள் அகதியாய்.

மக்கள் சேவை மிகத்தூயப்பணி-அது
என்றாவது அவர்கள் தலையாயப்பணி??!

கிறுக்கு எழுத்தாளன்.

உழுபவனை உதாசீனப் படுத்தும் சமூகம்
அழுபவனை ஆறுதல் படுத்தா சமூகம்
தொழுபவனைமுட்டாளாக்கும் சமூகம்
எழுபவனை எழவிடாதசமூகம்
விழுபவனை தூக்கிவிடாத சமூகம்-என
பழுதுகளாலான சமூகத்தை ஏற்றி சிகரத்தில்
எழுதுகோலால் வைப்பேனென்பார் ஏமாறாதீர்.

உண்மை நிலவரம்.

   
                                                          ஒரு பொய்யை போஷிக்க
                                                   உலையில் வைக்கப் படுகின்றன
                                                            ஓராயிரம் உண்மைகள்.

                                                                செரிக்க இயலாமல்
                                                                  சிரிக்கிறார் காந்தி.

இறக்கைகள் முளைக்கும் தருணம்.

அழைத்துச் செல்லவந்த
அம்மாவின் இடுப்பில் அமர்ந்து
பள்ளியில் நடந்த கதைகளை
மழலையில் குழந்தைக் கூறிவர
தோளிரண்டில் தோன்றின இறக்கைகள்.

வான்வழியே விரைவாக வீட்டை
வந்தடைந்தாள்  தாய்.

வெள்ளி, 2 நவம்பர், 2012

வாஸ்து..


                                                            மீன் தொட்டியை
                                                    நம் படுக்கையறைக்குள்
                                                  நம் கட்டில் தலைமாட்டில்

                                                     இடம் மாற்றி வைத்தாய்.
                                          
                                        சண்டை போட்டுக் கொண்டிருந்தவை
                                                     சமர்த்தாய் இப்போது
                                          குட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன.

இல்லறப் பயணம்.

யாரும்
பின்தொடர இயலாமலும்
புரிந்துக் கொள்ள இயலாமலும்
இருந்தது என்னுடைய
இலக்கற்ற பயணம்.

வாய்த்த வாகனமும்
வரப்பிரசாதம்.

செலுத்தும் திசையில
அலுத்துக் கொள்ளாது
சுமந்து என்னை ஓடுவதில்
சுகம் கண்டது .

அசதியும் உண்டு
வசதியும் உண்டு
இருவருக்கும் பயணத்தில்.

அனுசரித்துக் கொள்வதில்
அமைந்து விடுகிறது
எங்கள் வெற்றி.

வரப்போகும் ரசிகர்களின்
கொண்டாட்டத்திற்காகவும்
சந்தோஷத்திற்க்காகவும்
இப்பயணம் இலக்காகிவிடும்போது
வழக்கற்றுப் போகும்
இலக்கற்றப் பயணம் என்பது.

மரமேறி

மரமேறி மரமேறி களைத்தவரே ...மனம்
மரத்துப் போய் உடலும்தான் இளைத்தவரே

கர(ம்)மாறி கத்தி இடைக்குப் போனதென்ன ..
கணிணிதான் கையிரண்டில் வந்ததென்ன..

தர(ம்)மாறி தரணியெல்லாம் நாளாச்சு:அதுபோல்
தன்நிலையும் தான்மாற வாடினையோ.

சிரம்தூக்கி மேல்நோக்க சிரமப்பட்டு-கூகிளிலே
செவ்விளநீர் காய்த்த திசை தேடினையோ

புரமொன்றுப் பேசாய் முகம்நோக்கி ஆதலினால்
'பேஸ்புக்கில் புகுந்தனையோ:போர்

அறமென்று 'ட்வீட்டரிலே'அரசுசட்டங்களை
ஆதியோடந்தமாய் அலசி வகுந்தனையோ.

பரம்பொருளே பாரினில் என்னிலை மாற்றென
பாதிவழி நீயமர்ந்து பரமனுக்கு 'மெயில'னுப்ப

துறந்தனைத்தும் ஓய்வெடுக்கா உன் திறம்வியந்து
தென்னைபோல் நீ உயர வாழ்த்துகிறேன்

வேறென்ன செய்ய ..??

வளைந்த இலைகள்
வில் புருவம்,விழியாக..
 

மலர்ந்த இதழ்கள்
மது கசியும் வழியாக..
 

நுகர்ந்த உன் நாசியே
நொடியில் வண்ணத்துப்பூச்சியாக
 

நகர்ந்துப்போனேன் நான்
வாயிருந்தும் வாயில்லாப்பூச்சியாக.


உயிர் விளையாட்டு.


காட்டில் தீர்த்து முடிக்காத
துவேஷங்கள்
கடலில் ஈடேறுகின்றன .

எவர்மீது,ஏனென்று ..
எதுகுறித்தும் கவலையில்லை -
எதிர்படுபவன் ஏமாளி
எனும்பட்சத்தில்.

வறுமைக் கோட்டைத் தாண்ட
வலைவிரிக்க வந்தவன்
எல்லைக் கோட்டைத் தாண்டினானென்று
சல்லடைக் கண்ணாய் துளைக்கப்பட்டான்.

வாழ்க்கைப் போராளிகளை
விடுதலைப் போராளிகளாக
காட்சிப் பிழையோடே
காட்டிக் கொண்டிருக்கிறது
திகிலிலிருந்து இன்னமும் மீளாத
அவர்களின் தொலைநோக்கிகள்.

உங்கள் கர்ணகடூர மொழிதான்
எச்சரிப்பதற்கு
எல்லாவிதத்திலும் பொருந்திப்போகுமே..
இருந்தும் ஏன்..??!!

தன் மரணத்தின் காரணம்குறித்த
அவன் அறியாமை வானமெங்கும்
கருமையைஅப்பியிருந்தது.

கூடியிருந்த கடலின் கரிப்புத்தன்மை
கரையிலிருந்தவர்கட்கு ஏதேனும்
விபரீதத்தை உணர்த்தியிருக்கக்கூடும்.

நீங்களோ சாட்சிகள் இல்லையென்று
நக்கலாய் சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

பரந்த வானும்
விரிந்த கடலும்
வேறு என்னவென்று நினைக்கிறீர்கள்...

என்னினும் அதிகமாய்.

முழம் அளந்த பூக்காரி
கொஞ்சம் தள்ளி துண்டிக்க
என்னினும்
மகிழ்ச்சி அடைந்திருக்கும்-
உன்
கூந்தலில் அமர்வதை எண்ணி
அந்தக்
கொசுறுப் பூக்கள்..!!

ஏன் ,,??







மீன்களுக்கு மட்டும்
''போன்சாய்''கடல்
உருவாக்கித் தருபவர்கள்
கிளிகளுக்கும்,லவ்பேர்ட்ஸ்களுக்கும் 
''போன்சாய்''பூங்கா
அமைத்து தராது
ஏன்
''போன்சாய்''புழல்சிறை
அமைத்து தருகிறார்கள்..??

இப்படியும் ஒரு குழப்பம்.








மாடிப் படி ஏறும்போது
''மனோ நாளை வருது''என்று
கீழ்வீட்டு மாமி சொன்னாள்
எதிர்குடித்தன சீதாவிடம்.
 

அறைக்குத் திரும்பிய நான் அன்றைய இரவெல்லாம்
ஆலோசித்ததில்
தூக்கம்போனது-
மனோரஞ்சிதமா....
மனோரஞ்சனா...
மனோகரனா...
மனோகரியா...

புதன், 31 அக்டோபர், 2012

முதல் இரவு.







காமன் திருவிழாவில்
வழக்கமாகிவிட்டது
காணாமல்போவது
உடைகளுக்கு.

நான் மேலே..நீ கீழே..
நான் கீழே..நீ மேலே..
ராசலீலை ராட்டினம்
கனஜோராய் சுழல
மூச்சு வாங்குகிறது நமக்கு.

கட்டில்போரின்
எந்த கணத்தில்
உன் கால்கொலுசு என் முகத்தையும்
உன் கைகளின் உடைந்த
கண்ணாடிவளை என் கால்களிலும் கீறியது..?

தீராத சந்தேகங்களோடும்,சந்தோஷங்களோடும்
தீர்ந்தது அந்த முதல் இரவு.  

ரகசியங்களாலான கணங்கள்.








பேசமறந்து நீ இருக்கும் தருணங்கள்
உண்மையில் அபூர்வமானவை.
அழகற்றவையாக இருந்தாலும்.

துடிதுடிக்கும் உன் இதழ்களும்
படபடக்கும் உன் இமைகளும்
என் கேள்வியின் பாரத்தை
எனக்கு நன்றாகவே உணர்த்துகின்றன.

எனக்கும் பயத்தையே ஏற்படுத்துகின்றன
உன் மௌனத்தின் பேரிரைச்சல்.

வார்த்தைகளை நீ மென்று விழுங்க 
கவிதையாய் அசைகிறது தொண்டைக்குழி.
ஏனோ ரசிக்க விடவில்லை
ரகசியங்களாலான இந்த கணங்கள்.

என்றாவதொரு நாள் எட்ட
நின்றாவது நான் இப்படி கேட்டிடலாமென்று
ஓராயிரம் ஒத்திகைகள் நீயும் பதிலளிக்க
பார்த்துவைத்திருக்கலாம்.

உன் இதழோரம் கசியும் புன்னகை அதை
ஊர்ஜிதபடுத்துவதாகவேப்படுகிறது எனக்கு.

ஈர்ப்பு



உன்னைவிட நீ என்னையும்
என்னைவிட நான் உன்னையும்
அதிகமாய் விரும்புவதற்கு 
அடிப்படை காரணம்
உனக்கு தங்கத்தின் மீதும் 
எனக்கு கவிதைகள் மீதுமுள்ள
ஈர்ப்பாய் இருக்குமோ..

செவ்வாய், 30 அக்டோபர், 2012

இழப்பு.








வெல்ல அவசரப்படவேண்டியது காதல்.
மெல்ல அனுபவிக்கவேண்டியது வாழ்க்கை.

ஆனாலிங்கு

வெல்ல அவசரப்பட்டு வெல்லாமல் வாழ்க்கையையும்
மெல்ல தனக்குள்ளேயே அனுபவித்து
                                                  சொல்லாமல் காதலையும்..

இழப்பவர்களே அநேகம்.

வாசனை ரகசியம்.




நீரோடு சேர்ந்து
உன் வியர்வைத்துளிகளும்
வேருக்குள் பாய்ந்திருக்க வேண்டும்.

இல்லையெனில்
இப்பூக்களிடம்
எப்படிவரும்
இத்தனை வாசம்..!!

கடவுளின் செல்லப் பிராணி.

எங்களை கண்டவுடன்தான்
எத்தனை உற்சாகமாய்
ஓடி வருகிறாய் நீ.

கால்கள் நக்குவதும்..
பின்வாங்கி ஓடுவதும்..
மீண்டும் வேகமாய்வந்து
இடுப்பில் தாவி ஏறுவதும்..

நளினமிக்க
நடனம் போல் இருக்கிறது..

கட்டியிருக்கும்வரை கவலையில்லை.

கட்டவிழ்த்துவிட்ட நாளில்  நீ செய்த 
கபளீகரங்கள்  நினைவிலிருப்பதால் 
நுரைத் தள்ள ஓடிவரும் வேகத்திற்கு
அனைவரும்
மிக பயந்துதான் போகிறார்கள்.

அவிழ்த்து விடவேண்டாமென்று
வீட்டு சொந்தக்காரரிடம் வேண்டி
விண்ணப்பம் வைப்பதைத் தவிர
வாடகைக்கிருப்பவன் வேறென்ன செய்யமுடியும்..??

தேவதையை குழப்புபவர்கள்.

பேருந்திலிருப்பதை காட்டிலும்
நெரிசல் அதிகம்
இந்த பேருந்து நிறுத்தத்தில்..!

பேருந்துக்கு காத்திருப்பவர்கள்
அதில்
பேருக்கு ஓரிருவர்தான்.

நிழற்குடை தந்தவரைகாட்டிலும்
குடைநிழலில் வரும் உன்பெயர்தான்
சிலாகிக்கப்படுகிறது அதிகமிங்கு.

தூரத்தில் நீ வரும்போதே
நாகரிகமும்,கண்ணியமும்,
துளிர்விடத் துவங்கிவிடுகிறது
போலியாகவாவது.

உன் தரிசன பிச்சைக்காக
காத்திருப்பதால்
பிரயாணி எனும் பதம் இங்கு
யாருக்கும் பொருந்தாமல்போய்
பிச்சைக்காரர்களின் கூடாரமாகிவிட்டது-
பேருந்து நிறுத்தம்.

பேருந்து நிறுத்தத்தில் சரியாய்
பேருந்தை நிறுத்தும் உன் பேரழகு.  

ஏறாதவர்கட்கு உன் தரிசனம்போதும்-
அன்றைய நாளை
ஆனந்தமாய் கடப்பதற்கு.

ஏறியவர்களிலோ
காதலிக்கவும் உன்னை யாரும் முனைந்ததில்லை.
குறைந்தபட்சம்
உரசிப் பார்க்கவும் உள்ளத்தாலும் நினைந்ததுமில்லை.

வரமா இல்லையிது சாபமா எதுவென்று புரியாமல்
வந்துபோய் கொண்டிருக்கிறாய் நீயும் தேவதையாய்..




அந்தப்புர அந்தாதி.






                                         எத்திரை இட்டு விழிகளை மறைத்தாலும்
                                         சித்திரை பூம்பாவை சிரித்தாடி ஓடி வந்து
                                         முத்திரை ஒன்றை என் முகத்தில் பதித்திடவே
                                          நித்திரையில் வருவாள் நிதம்.

அந்தப்புர அந்தாதி.






                             நிலைத்த உறுதியோடு நினைத்தவளின் கரம்பற்ற
                            முளைத்த இன்னல்களை முறியடித்த மகிழ்ச்சியில்
                             திளைத்த என் முகத்தை பெரும் பூரிப்போடு-கவிழாது
                             மலைத்து நோக்குமுன் மார்பு.

அந்தப்புர அந்தாதி.



                                    கல்லால் வடித்திருந்த சிலைகளிலும் சிற்பி
                                    வில்லாய் வளைத்திருந்தார் இடையழகை-தமிழ்ச்
                                    சொல்லால் உன்னழகை வர்ணித்த நான் சொல்வேன்
                                     இல்லாதது உனக்கு இடை.

அந்தப்புர அந்தாதி.


                                      வண்ணத்தால் கருத்தவண்டு வழியும் மதுக்
                                      கிண்ணத்துள் வீழ்ந்து மயங்குதல் போலென்
                                      எண்ணத்துள் போதையேறி நான் வீழ்ந்ததுன்
                                      கன்னத்தில் விழுந்தக் குழி.


அந்தப்புர அந்தாதி.

 
                              வாளினையொத்த விழியாளே கவிஞர்கூட்டம்
                              தாளினில் வடித்த கவிதையாமுன் பேரழகை-எந்த
                              நாளினில் மங்கலநாண் பூட்டி அடைந்துன்
                              தோளினில் கொள்வேன் துயில்.

பயணம்.

பயணம் பெருக மனதில் தோன்றும் ஐயங்கள் குறையும்.
பணயம் வைக்க நமக்குத் தோன்றும் பயங்கள் மறையும்.
அணையுமிட்டு அறைக்குள் சுருங்க சுயமும் தொலையும்.
அன்றே அட அன்னையவள் நிலவைக் காட்டினாள்.-அங்கு
சென்றேவரும் எண்ணம்தனை சோறோடு ஊட்டினாள்.

மலராபரணம்



 மணமேடை காணா
மங்கையர் இனம் அறவே இல்லை.
கூந்தலுக்கு மட்டுமல்லாது
மேனிக்கும் மலராபரணமே என்றிருந்ததால்.

நாளொரு மலரும்,பொழுதொரு மணமுமாய்
மங்கையர்.
மணந்தவரும்
மலரோடு சேர்ந்த நாராய் மணந்திருந்தார்.

செய்கூலியின்று செய்யப்பட்ட ஆபரணங்கள்
அன்றன்று இரவுகளிலேயே
சேதாரமாகி தள்ளுபடி செய்யப்பட்டன.

வண்ணத்துப் பூச்சி,வண்டு விரட்டுவது
வீடுகளில் பெரும் சவாலாய் இருந்தது.

நந்தவனமே நகர்வது போலிருந்தது -
வைபவமொன்றில் கூடிய
நங்கையரை மேலிருந்து நோக்குங்கால்.

தங்கநகைகள் தரித்து அங்கொருத்தி
தாரகைபோல் தகதகக்க
திடுக்கிட்டு எழுந்தான் தூக்கத்திலிருந்து
அஞ்சுப் பெண்களை பெற்ற அய்யாசாமி.

திங்கள், 29 அக்டோபர், 2012

கிராமத்தோடு ஒரு கண்ணாமூச்சி.

நமக்கொன்றும் இல்லை அங்கெனினும்
பால்ய நினைவுகளை மீட்டெடுக்க
தவிர்க்க முடியாததாகி விடுகிறது
தாத்தா ஊர்நோக்கி ஓர் பயணம்.

பச்சை பசேலென்றிருந்த ஊர்
பல வண்ணத்தில் இருந்தது
பல்கிப் பெருகிய வீடுகளால்.

அடையாளம் மறைத்துக் கொண்டு
என்னோடு கண்ணாமூச்சி
ஆடத் தொடங்கிவிட்டது ஊர்
ஆலமரம் காணாமல் நான்
திடுக்கிட்ட இடத்திலிருந்தே.

ஆடிக் களித்த மைதானங்கள்
ஓடி ஒளிந்த திண்ணை வீடுகள்
இன்று எனக்கு
ஆட்டம் காட்டுகின்றன ஒளிந்தபடி.

தேடித் தேடி நானே
காணாமல்போன கணத்தில்
கண்டுபிடித்து என்னை மீட்டது
குஜிலி அம்மாவின் குரல்...
''நீ.. ரயில்வே தாத்தா பேரன்தானே..''

தொந்திரவில்லாமல் கண்டுப்பிடித்தது
தொகுப்பு வீடுகளுக்கடியில்
தொலைந்துப் போன ஏரியை மட்டும்தான்.
அதனருகில் குடியிருந்த
ஏரிக்கரை பிள்ளையாரால்..!!

அடுத்தமுறை
உன்னிலிருந்தே துவக்குகிறேன்
ஊரோடான கண்ணாமூச்சி விளையாட்டை...     








செல்லரிக்கும் உண்மை








இருக்குமிடம் ஒன்று.
இருப்பதாய்
சொல்லுமிடம் ஒன்று.

நம்பிப் பேசிக் கொண்டிருப்பவர் காதில்
நயமாய் விதைக்கப்  பொய்யை
இப்படித்தான்-
''செல்''லரித்துப் போகிறது உண்மை

பரிசு.







உனக்கு
மலர் ஒன்று தருவதா..
அல்லது
மலர்கொத்து தருவதா ..
என நான் யோசித்துக் கொண்டிருக்கையில்
மழையை அனுப்பி
உனை குஷிப்படுத்தி
எனை
முந்திக் கொண்டது மேகம்.

காலம் செய்த கோலம்.



அடுப்படியில் வெந்து நூலானது அந்தக்காலம்.
இடுப்பொடிய
கம்ப்யுட்டரில் நொந்து நூலாவது இந்தக்காலம்.
பெத்துப் போடும் மெஷீனாக
சத்திழந்து வாழ்ந்தது அந்தக்காலம்.
வெத்துப்பேப்பர் மெஷீனோடு
செத்துப் பிழைப்பது இந்தக்காலம்.
மாமனார்,மாமியாருக்கு
அடங்கிப் போனது  அந்தக்காலம்.
மானேஜேர்,ப்யுனுகெல்லாம்
நடுங்கிப் போவது இந்தக்காலம்.
வீட்டைப் பெருக்கி,விளக்கை ஏற்றி
வசந்தம் கூட்டியது அந்தக்காலம்.
வசதிகள் பெருக்கி வாலிபம் கருக்கி
கசந்துக் கழியுது இந்தக்காலம்.

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

தேவதை வீதி.

விடியலில் கோலமிட
வாசலுக்கு அவள் வருவாளென
வெளியில் காத்திருக்கும்
எங்கள் தெருப் புள்ளிகள்.
**********    ********    ***********
வீதியில் விளையாடும்
குழந்தைகள் குறித்து
விசனமில்லை
வீட்டில் உள்ளோர்க்கு-
வேகத் தடையாய்
வாகனங்களுக்கு
அவள் வீடு இருப்பதால்.
*******     ******     ************
தபாலே வருவதில்லை
இப்போதெல்லாம்
எவருக்குமிங்கு.
எனினும்வருகிறார்
 தபால்காரர்
அவள் வீட்டில்
தண்ணீர் குடிப்பதற்கு.
*********     ******   **********
எண்ணோ,நிறமோ,வடிவமோ
எதுவுமே தேவையின்றி
அவளே அடையாளமாகிறாள்
அந்த வீட்டிற்கு.
********    ********    *********
எங்கள் தெருவில்
அனைவருக்கும் தெரிந்தது
அவள் இல்லத்தில்
 யார்யார் உள்ளார்கள் என்பது.
யாருக்கும் தெரியாதது
அவள் உள்ளத்தில்
யார் உள்ளார்கள் என்பது..
*******   **********   ***********

ச்சீப் போ..







சிறு வயதில்
செல்லமாய் சீண்டியபோது
ச்சீப் போ என்றாய்
நாணத்தில்..

சில்மிஷமாய் காதில்

சிலவிஷயம் சொன்னபோது
ச்சீப் போ என்றாய் - காதல்
அஞ்ஞானத்தில் ..

கட்டிலறைக் காலத்தில்
கணக்கேயில்லை நீ சொன்ன
ச்சீப் போ விற்கு -காம
மோனத்தில்..

அந்திமக் காலத்தில்
அடியேய் நானே உனக்கு
ச்சீப்போ என்றாகிவிடுவது -எந்தக்
கோணத்தில்..??

சில பிணக்குகளும்..சீராகாத கணக்குகளும்..

                                

மொத ராத்திரி வேளையிலே
சீர் கொறஞ்ச சுணக்கத்துலே
பாவமுன்னுப் பாராமே
கோவமதும் கொறையாமே
செஞ்சீங்க என்கிட்டே வம்போவம்பு.
அங்கே மொனமுறிஞ்சு
மூலையிலே மன்மத அம்பு.

ஆத்தா பேச்சே கேட்டு
ஆதாரம் கேட்காமே
சம்சாரம்னு பாக்காமே
சாத்தா சாத்துனீங்க-என்னை
சாத்தான்னு ஏசனீங்க.-நம்மை
சேத்துவெச்ச சாமி மொகத்தில்
சேத்தத்தான் பூசனீங்க.

பொங்கவெச்ச சோத்துலே
பொடிக் கல்லு இருந்ததுக்கும்
பொட்டப்புள்ள ரெண்டு
தொடர்ச்சியா பொறந்ததுக்கும்
விழுந்த அடிக்கு நான்
விழிநீர் வடித்ததில்லை.
பாசமன்றி வேறொன்றை-இந்தப்
பாவிமகப் படித்ததில்லை.

ஒருக்களிச்சு படுத்து
ஒன்னை நினைக்கையிலே
ஓரக் கண்ணில் வழிஞ்ச நீர்
தலையணையை நனைக்கையிலே
ஈரம்தான் ஆனதய்யா உள்ளிருந்த
இலவம்பஞ்சு..
தாரம்நான் எதிர்பார்த்தேன் அப்படியோர்
ஈர நெஞ்சு.

தமிழ்

                                                                         
                                                                   தமிழ்


                                            உதிரத்தில் கலந்தது தமிழ்.
                                       உள்ளிழுத்து விடும் மூச்சு தமிழ்.
                                   உணர்வாய்,உயிராய் இருப்பது தமிழ்.
                                        தமிழுக்கு கேடு நினைப்பவனை
                                                              நீரில் அல்ல-
                                                        

                                                        அமிலத்தில் அமிழ்.




மழை பாடம்.



                                                    காய்ந்த கிணற்றை நிரப்பியது
                                                            என்று கணவன் மகிழ
                                                    காய்ந்த வற்றலை நனைத்தது
                                                            என்று மனைவி சபித்தாள்.
                                                               

                                                            மழை பெய்தே ஓய்ந்தது.

மன வாசனை.

வாவென்று வேண்டுகிறோம்.
வந்தால்
வாசல்கதவோடு சேர்த்து
சன்னலையும் சாத்திக் கொள்கிறோம்.

வருத்தப்படாத
வித்தியாச விருந்தினன் நீ.

முன்வாசலில் மரம்செடிகளுக்கு
முத்தங்களை இறைத்துவிடுகிறாய்.
பின்வாசலில் காய்ந்தக் கிணற்றை
முடிந்தவரை நிறைத்து விடுகிறாய்.

மூடிய ஜன்னல்களுக்குள்
கப்பல்கள் தயார்
கத்தியின்றி,கத்திக் கொண்டு..

விளையாட விடாதவருத்தத்தில்-

மழையே,மழையே போ.. போ..
குட்டிகளின் கலாட்டா
ஆங்கிலத்தில் கத்திக் கொண்டு.

நிராகரிப்புகளால்
நீ வடிக்கும் கண்ணீர்
தனியேத் தெரிவதில்லை.

முதன்முறை
மண் வாசனையோடு உன்
மன வாசனையும் முகர்ந்தேன்.

சோற்றில் கைவைக்க அமர்ந்தவன்
எழுந்து சட்டையிட்டு
சேற்றில் கால்வைத்து வெளிவந்தேன்.

ஜலதோஷத்திற்கு பயந்து
வீடுள்ளவர்கள் வீட்டினுள்ளே-
சுவர்களே நனைந்தபடி.

சந்தோஷமாய் ஆட்டத்தோடு
வீடற்றவர்கள் ரோட்டினிலே-
அவர்களே நனைந்தபடி.

வாவென்றதும் வந்த மாமழையே
பூமி நோக்கி விரைந்தபடி நீ..
ஆரத் தழுவிக் கொள் என்னை
வானம் நோக்கி கரைந்தபடி நான்..

சனி, 27 அக்டோபர், 2012

இருப்பை பொறுத்து..

அருங்காட்சியகத்தில் கவர்ந்ததென்னை
அவ்வளவு கலையம்சத்தோடு அது.

இறைச்சி,மீன் கடையில்,அடுக்களையில்
பசி,ருசியை தூண்டும் வேலையேப் பார்த்தது.

முதன்முதல்
நாவிதர் பிரயோகப்படுத்தியபோதும்
கலவரப்படுத்தவில்லை.

காரணமின்றி குடிபோதையில்
காற்றைக் கிழித்தவண்ணம்
கடைத் தெருவில் கலாட்டா செய்பவன்
கையில் கண்டபோது அத்தனை
அச்சுறுத்தலாயிருந்தது அது-
 
அந்த
முரடனின் முகத்தில் தாண்டவமாடிய
மூர்க்கம் அதில் பிரதிபலித்ததால் .

வெள்ளி, 26 அக்டோபர், 2012

நாணத்தின் தடம்.





                                                                  மழை நாளில்
                                                              யாரைக் கண்டு யார்
                                                         தன் கால்கட்டை விரலால்
                                                               நாணத்தில் போட்டது
                                                          வானத்தில் வானவில் எனும்
                                                                 அரைவட்டக் கோலம்..!!

கடவுள் வந்திருந்தார்.

கடவுளை அழைப்பதற்கும்
என் கைபேசியில் எண்ணிருந்தது.

உதவிக்கு அழைத்தபோதெல்லாம்
உடனே உடனே வந்தார்.

பிரச்சனைகளைக் கேட்டுவிட்டு
முடித்துவிடலாம் என்பார்
பெரிதாய் அலட்டிக்கொள்ளாமல்.

தீர்வு சொல்ல அவர்
ஆரம்பிக்குமுன் அடுத்த அழைப்பு.

உடனே உடனே போய்விடுவார்.

இன்னும் எத்தனை புண்ணியவான்களிடம்
இவர் எண் இருக்கிறதோ..??

திட்டுங்கள்..தீர்க்கப்படும்..

தன் அப்பா தன்னை
அடிக்காத நாளில்லையென்று
என் அப்பாவிடம் கூறுவாராம்
அவர் அப்பா.
சூடுக் கூட வைத்துவிடுவாராம்.

தானும் தன் அப்பாவிடம்
வாங்குவதுண்டாம்
அடி அவ்வப்போது.

அனாவசியமாய்கை நீட்டமாட்டார்
என் அப்பா.

அவசியத்திற்குக் கூட
அடிப்பதில்லை நான்
ஒரே மகன்என்பதால்.
 
திட்டித் தீர்த்துவிடுகிறேன்,

நன்றாகவே பயன் தருகிறது
உடனே ஆறிவிட்டாலும்
நாவினாற் சுட்ட வடு.

வியாழன், 25 அக்டோபர், 2012

நடுநிசி நாய்கள்.

எப்போதாவது
நேரிட்டு விடுகிறது இந்த
நடுநிசி நாய்களை எதிர்கொள்வது.
 

வெறும் பயம் கலந்த மிரட்டலாலா
வழியில் தென்படும் கற்களாலா..
எதனால்
அவைகளை சமாளிப்பதென்பதை
அவைகள்தான் நிர்ணயிக்கின்றன.
 

கும்மிருட்டில் காலருகில்
திடீரென அவை
குலைத்தபடி நெருங்கும்போது
உச்சந்தலையில் தோன்றும் ஜில்லிப்பு
உண்மையில்
நவரத்னா எண்ணையல்லாது
நாய்களால் மட்டுமே தர இயலும்.
 

அடுத்தத் தெரு நாய்களிடம்
தம்மை ரணமாக்கிக் கொள்ளாது
அவைகள் தம்
எல்லை வந்ததும் விலகிக் கொள்வது
அந்த இருட்டிலும் நமக்கு
ஏதோ ஒரு வெளிச்சத்தை பாய்ச்சுகிறது..
 

விடாமல் அவை குரைக்கின்றன.
எனினும் அவை
விளக்கில்லா வீதியின்
வேறு சில பயங்களை குறைக்கின்றன.
 

அந்த குலைத்தலில்
நான் வேகமாக விரைகிறேன் வீடு நோக்கி..
இரவு வேகமாக கரைகிறதுவிடியல் நோக்கி..