ஞாயிறு, 17 மார்ச், 2013

எறும்புகளின் பேரணி



















அந்த எறும்புகள் ஒவ்வொன்றும்
ஆரம்ப பாடசாலை வகுப்புகளிலிருந்தே
அறிமுகம் நமக்கு.

நமக்கான இனிப்பை சுமந்து வரிசையாய்
நகராது அவை நிற்க -அவற்றின் மீது
நகர்ந்தூர்ந்து சுவைக்கும் நம் மனது.

அர்த்தமுள்ள அவற்றின் அணிவகுப்பை
அமைக்க அனைவரும் முயற்சிக்கிறோம் .

அந்த இலக்கை அடைபவர்கள்
அறியப் படுகிறார்கள் இலக்கியவாதிகளாய்.

கடைந்தெடுத்த அயோக்கியத்தனங்களை
கடுமையாய் சாடியபடி கட்டெறும்பு அணிவகுப்பு..
பஞ்சினையொத்த மென் உணர்வுகளை 
பாங்காய் சொல்லியபடி சிற்றெறும்பு அணிவகுப்பு..
தோழர் புரட்சிகளுக்கு தோள்  கொடுத்தபடி
தோரணையாய் செவ்வெறும்பு அணிவகுப்பு..

எறும்பூர பெரும்பாறைத்  தேயும்-இந்த
எறும்புகள் மீது
பார்வையூர மனபாரம் தேயும்.

கழிப்பறைகளிலும் காணக்கிடைக்கும்
கவர்ச்சியான அணிவகுப்பென்றொருத் தகவல்.
கண்டுகொள்ளாதிருத்தலதை நலம் என்பது
காதில் விழுந்த கூடுதல் தகவல்.

ஆலயத்திற்கு ஒப்பானவை
அவற்றின்  உறைவிடங்கள்.

எறும்புகளின் புற்றினை இடித்து
எதையாவது கட்டிவிடத் துடிக்கும்
எதேச்சாதிகாரத்தை எதிர்த்து
எல்லா இடங்களிலும் 
உருவாகியபடியே உள்ளது
எறும்புகளின் பேரணி.                 
                                                                      -வா.சுகன்ப்ரியன்.17/03/2013.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக