செவ்வாய், 30 அக்டோபர், 2012

மலராபரணம்



 மணமேடை காணா
மங்கையர் இனம் அறவே இல்லை.
கூந்தலுக்கு மட்டுமல்லாது
மேனிக்கும் மலராபரணமே என்றிருந்ததால்.

நாளொரு மலரும்,பொழுதொரு மணமுமாய்
மங்கையர்.
மணந்தவரும்
மலரோடு சேர்ந்த நாராய் மணந்திருந்தார்.

செய்கூலியின்று செய்யப்பட்ட ஆபரணங்கள்
அன்றன்று இரவுகளிலேயே
சேதாரமாகி தள்ளுபடி செய்யப்பட்டன.

வண்ணத்துப் பூச்சி,வண்டு விரட்டுவது
வீடுகளில் பெரும் சவாலாய் இருந்தது.

நந்தவனமே நகர்வது போலிருந்தது -
வைபவமொன்றில் கூடிய
நங்கையரை மேலிருந்து நோக்குங்கால்.

தங்கநகைகள் தரித்து அங்கொருத்தி
தாரகைபோல் தகதகக்க
திடுக்கிட்டு எழுந்தான் தூக்கத்திலிருந்து
அஞ்சுப் பெண்களை பெற்ற அய்யாசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக